வவுனியா வடக்கில் ஒரு வருடமாக அதிபரின்றி இயங்கும் பாடசாலை

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - புளியங்குளம், முத்தமிழ் வித்தியாலத்தில் ஒரு வருடமாக அதிபர் நியமிக்கப்படாமை காரணமாக வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரை பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இன்றைய தினம் கையளித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அந்த மகஜரில், கடந்த ஒரு வருடமாக எமது பாடசாலைக்கு அதிபர் நியமிக்கப்படவில்லை. முன்னர் கடமையாற்றிய அதிபர் இடமாற்றம் பெற்று சென்றிருந்தாலும் அவரது கட்டுப்பாட்டிலேயே பாடசாலை தற்போதும் இயங்கி வருவதாக பாடசாலை சமூகம் எமக்கு கூறுகின்றது.

தற்போது பாடசாலைக்கு பொறுப்பாக இருக்கும் ஆசிரியர் பாடசாலையின் மாணவர்களையோ, உபகரணங்களையோ சரியான முறையில் கவனிப்பதில்லை. பாடசாலையின் சிற்றூழியர், காவலாளி போன்றோர் உரிய முறையில் தமது கடமைகளை மேற்கொள்வதில்லை.

பாடசாலையின் ஆசிரியர்கள் இரு பிரிவாக செயற்பட்டு வருகின்றனர். எமது பாடசாலை பின் தங்கிய பகுதியில் காணப்பட்டாலும் கடந்த காலங்களில் பல்வேறு துறைகளிலும் வெற்றி நடை போட்டமை யாவரும் அறிந்ததே.

தற்போது அதில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் காரணம் பாடசாலைக்கு நிரந்தரமான அதிபர் ஒருவர் இல்லாமையே என்பதை எம்மால் ஊகிக்க முடிகின்றது.

குறித்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளிற்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

வலயக்கல்வி பணிப்பாளர் எமக்கு ஒரு வாரத்திற்குள் நல்ல தீர்வு வழங்குவாராயின் நாம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று அந்த மகஜரில் தெரிவிக்கபட்டுள்ளது.

மகஜரை பெற்றுக் கொண்ட வடக்கின் வலயகல்வி பணிப்பாளர் அன்னமலர், இது தொடர்பில் மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

Latest Offers