தமிழ் தேசத்தின் அங்கீகாரத்திற்காக தொடர்ந்து போராடவேண்டும்! கயேந்திரன்

Report Print Theesan in சமூகம்

தமிழ் தேசத்தின் அங்கீகாரத்திற்காக தொடர்ந்து போராட வேண்டியதுடன் அதற்காக எமது உயிர் மூச்சுள்ளவரை நேர்மையாகவும், அர்பணிப்பாகவும் பயணிப்போம் என்று ஆணித்தரமாக வலியுறுத்துகிறோம் என தமிழ் தேசிய மக்கள் முண்ணியின் பொதுசெயலாளர் செ.கயேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா கனகராயன்குளத்தில் இன்று நடைபெற்ற குமார்பொன்னம்பலத்தின் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களிற்கான அடையாளம் ஒன்றை ஏற்படுத்துவதில் முன்னின்று செயற்பட்டவர்களுள் குமார் பொன்னம்பலமும் ஒருவர். செல்வந்த குடுப்பத்தை சேர்ந்த பிரபலமான சட்டதரணியான அவர் வசதிவாய்ப்புக்கள் எவ்வளவோ இருந்தும் கூட எமது மண்ணை உயிருக்குயிராக நேசித்து ஈழத்தமிழர்களிற்காக தன்னை அர்பணித்து உழைத்திருந்தார்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தமிழ் தேசத்தின் அங்கீகாரத்தை வேண்டி நகர்ந்த வேளையிலே அந்த போராட்டத்தின் நியாயப்பாடுகளை ஏற்றுக்கொண்டு, அதன் நியாயங்களை சர்வதேச அரங்கு வரை எடுத்துசென்று அதற்கு அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும் என்ற இலட்சிய வெறியோடு உலகின்பல நாடுகளிற்குபடி ஏறி சர்வதேச மனிதஉரிமை அமைப்புகளையும், இராஜ தந்திரிகளையும் தேடிசென்று சந்தித்து அக்காலப்பகுதியில் நடைபெற்ற இனப்படுகொலைகள், இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இலங்கை அரசின் பயங்கரவாத செயற்பாடுகளை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்துவதில் மிகவும் பங்காற்றியவர்.

இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட மாணவியான கிரிசாந்தி தொடர்பான தகவல்களை வெளி உலகிற்கு கொண்டு சென்று செம்மணி புதைகுழியை தோண்டி சந்திரிகா அம்மையார் சமாதான வேடம்போட்டு புரிந்த இனப்படுகொலை சம்பவங்களையும் அவரது கொலை முகத்தையும் சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்தியதிலே இவரது பங்குஅளப்பரியது.

அவரது ஐனநாயக வாதங்களை ஏற்றுக்கொள்ளாத சந்திரிகா அரசு அவரை படுகொலைசெய்தது. அவரது தியாகத்திற்கு மதிப்பளித்து தேசிய தலைவர் மாமனிதர் என்ற அதி உயர் கௌரவத்தை வழங்கியிருந்தார்.

அவர் எந்த இலட்சியத்திற்காக உயிர்திறந்தாரோ அந்த அடிப்படையில் வடக்கு, கிழக்கு இணைந்ததாயகத்திலே சுயநிர்ணய அடிப்படையிலே எங்களிற்கான அரசியல் தீர்வை பெறுவதற்காக தொடர்ந்து பயணிக்க வேண்டும்.

ஒற்றையாட்சியை நாம் நிராகரிக்க வேண்டும், ஏக்கிய ராட்சியை நாம் நிராகரிக்க வேண்டும். பௌத்தம் அரச மதம் என்பதை நாம் நிராகரிக்க வேண்டும்.

எமது தேசத்தின் அங்கீகாரத்திற்காக தொடர்ந்து போராட வேண்டும். அதற்காக எமது உயிர்மூச்சுள்ளவரை நேர்மையாகவும் அர்பணிப்பாகவும் பயணிப்போம் என்பதை இந்த இடத்திலே ஆணித்தரமாக வலியுறுத்துகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers