மன்னார் வங்காலையில் படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியனின் அடிகளாரின் 34வது ஆண்டு நினைவேந்தல்

Report Print Ashik in சமூகம்

சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியனின் அடிகளார் மற்றும் மக்களின் 34வது ஆண்டு நினைவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று காலை 8 மணியளவில் வங்காலை பங்குத்தந்தை அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தலைமையில் வங்காலை தூய ஆனாள் ஆலய முன்றலில் நடைபெற்றுள்ளது.

மன்னார் வங்காலையில் 1985ஆம் ஆண்டு தை மாதம் 06ஆம் திகதி வங்காலை தூய ஆனாள் பங்குப் பணியாளராகச் சேவையாற்றிய அருட்பணி மேரிய பஸ்ரியன் அடிகளாரும், அவருடன் தங்கியிருந்த சிறுவர்களும், உதவியாளர்களும் பொது மக்களுமென 10 பேர் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியனின் அடிகளார் மற்றும் மக்களின் நினைவு அஞ்சலி வருடா வருடம் வங்காலை தூய ஆனாள் பங்குச் சமூகத்தால் நடாத்துப்பட்டு வருகின்றது.

இதன்போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார், சுடர் ஏற்றி அருட்தந்தை மேரிய பஸ்ரியன் அடிகளாருடைய சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட 10 பொது மக்களுக்கும் வங்காலை பங்குத்தந்தை அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தலைமையில் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வங்காலை பங்கினைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளதோடு, மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியனின் அடிகளார் மற்றும் மக்களின் 34ஆவது ஆண்டு நினைவையொட்டி வங்காலை தூய ஆனாள் ஆலயத்தில் இரத்ததான நிகழ்வும் இடம்பெற்றுள்ளதோடு, கலந்துகொண்டு இரத்ததானம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers