வட மாகாணத்தின் புதிய ஆளுநருக்கு வவுனியாவிலிருந்து கடிதம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை மூடுவதற்கு ஆவன செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய கடிதம் வட மாகாணத்தின் புதிய ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தை வவுனியா குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கம் இன்று ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது.

குறித்த கடிதத்தில், புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக மதுபானசாலையொன்று திறக்கப்பட்டுள்ளது.

மக்களின் குடிமனைகள், ஆலயம், வவுனியா பொது வைத்தியசாலைகளுக்கு அண்மையிலும் அரசாங்கத்தின் எண்ணக்கருவில் உருவாகிய பாரம்பரிய உணவகம் அமைந்துள்ள பகுதிக்கு முன்பாகவும் குறித்த மதுபானசாலை திறக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடானது மக்களின் இயல்பு வாழ்வியலை பாதிக்கும் என்பதுடன், சமூக கட்டமைப்பை சிதைக்கும் செயற்பாடு என்பதனாலும் அந்த மதுபானசாலையை மூட ஆவன செய்து தருமாறு தாழ்மையுடன் கோருகின்றோம்.

அத்துடன் குறித்த மதுபானசாலையை மக்கள் குடிமனை உள்ள பகுதியில் திறப்பதற்கு அனுமதி வழங்கிய கிராம சேவகர், பிரதேச செயலாளர், மதுவரி திணைக்கள அதிகாரிகள் ஆகியோருக்கு இது தொடர்பான தெளிவூட்டல்களை தாங்கள் வழங்கி உதவி புரிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.