மட்டக்களப்பில் அட்டகாசம் செய்த பிக்குவால் குழப்பம்

Report Print Rusath in சமூகம்

மடக்களப்பில் உள்ள ஸ்டூடியோ கடைக்குள் பிக்கு ஒருவர் புகுந்து உரத்த சத்தமிட்டு அட்டகாசம் செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பிக்கு, ஸ்டூடியோ கடையினுள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த குழந்தை ஒன்றின் புகைப்படத்தை காட்டி இது யாருடையது?, எனது சிறிய வயது புகைப்படம். இதை ஏன் நீங்கள் காட்சிப்படுத்த வேண்டும், இதற்கு விலை 125 ரூபாயா? நான் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு போகப் போகிறேன் என தெரிவித்து கடையில் வேலை செய்யும் ஊழியர்களை அச்சுறுத்தி பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளார்.

காவி உடை தரித்து வந்தவர் உண்மையில் பிக்கு போன்று நடந்து கொள்ளவில்லை என ஸ்டூடியோ கடையில் தொழில் புரியும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் போது வீதியில் நின்றவர்கள் பிக்குவை மறித்து நீங்கள் எங்கிருந்து வந்துள்ளீர்கள் என வினவியுள்ளனர். அதற்கு பிக்கு, நான் மட்டக்களப்பைச் சுற்றிப்பார்க்க வந்துள்ளேன் என தெரிவித்து விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் இவ்விடயம் குறித்து பொலிஸ் அவசர பிரிவுக்கு குறித்த கடை ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

பொலிஸார் அவ்விடத்திற்கு வருவதற்கு முன்னர் பிக்கு குறித்த பகுதியை விட்டு மட்டக்களப்பு புகையிரதப் பகுதி நோக்கிச் சென்றதாக கடை ஊழியர்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

பின்னர் மட்டக்களப்பு பொலிஸார் குறித்த பகுதிக்கு விரைந்து விசாரணை நடாத்தியுள்ளனர்.