திருகோணமலையில் திடீரென நூற்றுக்கணக்கான மாடுகள் பலி

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலையில் அதிகளவான மாடுகள் திடீரென உயிரிழந்தமையினால் அவற்றை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட தோப்பூர், நல்லூர் மற்றும் சம்பூர் பள்ளிக்குடியிருப்பு பகுதிகளில் அதிகளவான மாடுகள் உயிரிழந்துள்ளன. இவற்றை பெக்கோ இயந்திரம் கொண்டு புதைக்கும் நடவடிக்கை பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

அதிகளவான மாடுகள் உயிரிழந்து காணப்படுவதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைவாக தோப்பூர் கரைச்சை காட்டுப் பகுதியில் இறந்த மாடுளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 600 க்கும் அதிகமான மாடுகள் உயிரிழந்துள்ளதோடு தொடர்ந்தும் இறந்து வருகின்றன.

மேலும் மாடுகளின் உயிரிழப்பிற்கான காரணத்தை கண்டறிவதற்காக இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் முடிவுகள் வரும் வரையில் மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட 14 இறைச்சிக் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.