மாணவர் மத்தியில் போதைப்பொருளா? ஜனாதிபதி நேரடி அவதானம்!

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

நாட்டில் பாடசாலை மாணவர் மத்தியில் போதைப்பொருள் பாவனைக் கலாசாரம் துளிர்விட்டதனை அவதானித்த ஜனாதிபதி உடனடியாக பாடசாலை மட்டத்தில் அதற்கான திவீர நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சை பணித்துள்ளார்.

அத்துடன் ஜனவரி 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை பாடசாலை போதைப்பொருள் தடுப்புவாரம் பிரகடனம் செய்துள்ளார்.

போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக பிள்ளைகளிடமிருந்து கற்றுக்கொள்வோம் என்ற மகுடத்தின் கீழ் இவ்வாரம் அனுஸ்ட்டிக்கப்பட விருக்கிறது.

ஜனாதிபதி செயலகம் கல்வியமைச்சு மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் இணைந்து இந்த விசேட வேலைத்திட்டத்தை பாடசாலையிலும் பாடசாலை சமூகத்திலும் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதற்கென கல்வியமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமந்த சுற்றுநிரூபமொன்றையும் சகல மாகாண மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கும் அதிபர்களுக்கும் அனுப்பிவைத்துள்ளார்.

21ஆம் திகதி முதல்நாள் மாணவர்களை விழிப்புணர்வூட்டும் செயற்றிட்டம் இடம்பெறும். 22ஆம் திகதி இரண்டாம்நாள் பெற்றோர்களை விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளும் மூன்றாம் நாள் 23ஆம் திகதி போதைப்பொருள் தொடர்பில் சட்டரீதியான விடயங்கள் தொடர்பிலான விழிப்புணர்வூட்டும் செயற்றிட்டம் நான்காம்நாள் 24ஆம் திகதி அரசியல்வாதிகளுடனான போதைப்பொருள் தொடர்பிலான சந்திப்பு ஜந்தாம்நாள் 25ஆம் திகதி போதைப்பொருள் தொடர்பாக ஊடகவியலாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் என்பன நடைபெற ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இச்செயற்பாடுகளை வலயக்கல்வி பணிப்பாளர்களும் மாகாண கல்வி பணிப்பாளர்களும் கண்காணித்து அறிக்கையிடல் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.