மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத மணல் அகழ்வு பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணை மேற்கு முள்ளிவட்டவான் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்களால் இன்று கவன ஈர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முள்ளிவட்டவான் ஆற்றில் இரவு நேரங்களில் சட்டவிரோமான முறையில் மணல் அகழ்வதால் விவசாய நிலங்கள் பாதிப்படைவதுடன், வீதிகள் குன்றும் குழியுமாக சேதமடைந்து காணப்படுவதை கண்டித்தும், ஓட்டமாவடியில் பொருட்கள் கொள்வனவு செய்து விட்டு திரும்பும் போது இருவரை தாக்கிய சம்பவத்தை கண்டித்தும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஆற்றில் மணல் அகழ்வதால் வயல் நிலங்கள் மற்றும் மயானங்களுக்கு செல்வதாயின் ஆற்றினைக் கடந்து செல்ல வேண்டும். இதற்கு முன்னர் ஆற்றின் உயரம் ஒன்றரை ஆழத்தில்

காணப்பட்டது. ஆனால் தற்போது ஏழு அடி ஆழமாக காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்படைந்து காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமத்தில் 45 குடும்பங்கள் ஜீவனோபாய தொழிலாக மீன்பிடி மற்றும் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். இவ்விடத்தில் மண் அகழ்வதை நிறுத்துமாறு கோரினால் மணல் அகழ்பவர்கள் அடிக்க வருவதாகவும், தகாதவார்த்தைகளால் பேசுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் மணல் அகழ்வதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, இங்கு அனுமதியுடன் எனது மச்சானும், சகோதரனும் மணல் அகழ்கின்றனர். ஒரு மாத்திற்கு 100 கியூப் மணல்

அகழப்படுகின்றது.இவர்கள் கூறுவது போன்று இரவு நேரங்களில் மண் அகழ்வதுமில்லை, மக்கள் குடியிருப்பு வீதியை பயன்படுத்துவதுமில்லை எனவும், இவர்களை தாக்கியவர்களுக்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்புமில்லை என ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.எம்.ஹனிபா தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதேசத்தில் மணல் அகழ்வதை தடுத்து நிறுத்துவதுடன், தாக்கியவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும், சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்துமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது மணல் அகழ்பவர்களுக்கும், பிரதேச மக்களுக்குமிடையில் வாக்குவாதம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.