மகிந்தவின் எதிர்க்கட்சித் தலைவர் பற்றி கூறும் வாசுதேவ நாணயக்கார

Report Print Steephen Steephen in சமூகம்

ஜனாதிபதியின் அங்கம் வகிக்கும் கட்சியை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்த சந்தர்ப்பங்கள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். இப்படி ஜனாதிபதியின் கட்சியை சேர்ந்தவர்கள் சில முறை எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச என்று சபாநாயகர் நேற்று தீர்மானம் ஒன்றை அறிவித்தார். அவ்வப்போது சபாநாயகரும் சரியான தீர்வுகளை வழங்குகிறார்.

ஐக்கிய தேசியக் கட்சி தற்போது தனித்து தேர்தலில் போட்டியிட முடியாது. ஐக்கிய தேசிய முன்னணி என்பதை மாற்றி ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரில் கூட்டணியை ஏற்படுத்த உள்ளனர்.

எந்த கட்சியும் புதிய பெயர் ஒன்றை தெரிவு செய்யும் போது, இருக்கும் பெயர் போதுமானதல்ல என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள பிரச்சினைகளை தான் இது காட்டுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி பல்வேறு அழுத்தங்களுக்கு அடிப்பணிய வேண்டிய நிலைமை ஏற்படும். இதற்கு அமைய அவர்கள் கட்சியின் பெயரை முற்றாக மாற்ற வேண்டி வரும்.

மைத்திரிபாலவும் மகிந்த ராஜபக்சவும் இணையும் கூட்டணியின் பெயரை நாங்கள் தெரிவு செய்ய வேண்டும். ஆனால், ஐக்கிய தேசியக்கட்சிக்கு அந்த பிரச்சினையில்லை.

கட்சிக்குள் இருக்கும் பிரச்சினையால் அவர்கள் புதிய பெயரை தெரிவு செய்தாக வேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.