திருகோணமலை பகுதியில் குப்பை அகற்றுதல் தொடர்பாக புதிய நடைமுறை

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - உவா்மலை பகுதியில் குப்பை அகற்றுதல் தொடா்பாக பொதுமக்களின் நலன் கருதி புதிய நடைமுறையொன்றை அமுல்படுத்த நகரசபை தீா்மானித்துள்ளது.

இதன் அடிப்படையில் உவா்மலை பகுதி 03 வலயங்களாக பிரிக்கப்பட்டு குறித்த பகுதிக்கு பொறுப்பாக 01 மேற்பார்வையாளரும், 01 தலைமை தொழிலாளியும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு வலயத்திற்கும் குப்பை சேகரிக்கும் வாகனம் வருகின்ற தினம் பற்றியும் அன்றைய தினம் வாகனத்துடன் மேற்பார்வை மேற்கொள்ள வரும் உத்தியோகத்தர்களின் பெயரும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட உள்ளதாகவும் நகர சபையின் உயரதிகாரியொருவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை வலயம் 01 திங்கட்கிழமையும், வெள்ளிக்கிழமையும் வலயம் 02 செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் வலயம் 03 புதன் கிழமையும், சனிக்கிழமையும் என நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நகரசபை வாகனம் வரும் போது சில வீடுகள் பூட்டி இருப்பதால் குப்பை அகற்ற முடிவதில்லையெனவும், சிலருக்கு குப்பை செகரிக்கும் வாகனம் வருவது தொரியாததால் குப்பை அகற்ற முடிவதில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை கருத்திற்கொண்டு பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஒலி சமிஞ்ஞை ஏற்பாடு வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளதாக நகர சபை தெரிவித்துள்ளது.

குறித்த தினங்களில் அப்பகுதிக்கு குப்பை அகற்றும் வாகனங்கள் வரவில்லையெனின் நகர சபையுடன் தொடர்பு கொண்டு சேவையை பெற்றுக்கொள்ளலாம். இந்நடைமுறை ஒரு பரீட்சார்த்த நடவடிக்கை ஆகும்.

இது வெற்றியடையும் பட்சத்தில் ஏனைய பகுதிகளுக்கும் இதே போன்ற சேவையை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் நகர சபையின் உயரதிகாரியொருவர் தெரிவித்திருந்தார்.