தாபரிப்பு பணம் செலுத்தாது தலைமறைவாக இருந்த நபர் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைச் சேனை பகுதியில் நபரொருவர் தாபரிப்பு பணத்தை செலுத்தாது தலைமறைவாக இருந்து வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் 32 வயதுடையவரெனவும் தனது மனைவி, பிள்ளைகளை பிரிந்து மறு திருமணம் முடித்து வாழ்ந்து வரும் நிலையில் முதல் மனைவியின் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டிய தாபரிப்பு பணத்தை செலுத்தாது கொழும்பில் வேலை செய்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த நபர் வீட்டுக்கு வந்துள்ளதாக சம்பூர் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை அவரின் வீட்டினை முற்றுகையிட்ட போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.