இராணுவத்தினரின் அலட்சியத்தால் உயிருக்காக போராடும் அரசியல் கைதி

Report Print Thileepan Thileepan in சமூகம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் விடுதலை கோரி உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்ற சிவப்பிரகாசம் சிவசீலன் (32) என்ற அரசியல் கைதியின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைகள் முற்றுப்பெற்று, தீர்ப்பளிக்கப்படுகின்ற நிலையில் வழக்குத் தவணைகளுக்கு இராணுவ தரப்பினர் வருகை தருவதில் காட்டுகின்ற அலட்சியத்தன்மையும் , அக்கறையின்மையும் அவருடைய விடுதலையை தாமதிக்க செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 5 ஆம் திகதி தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், தண்ணீர் அருந்துவதையும் நிறுத்தியுள்ளதனால் அவருடைய உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி இறுதிக்கட்ட யுத்த நேரம் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கடந்த 10 வருடங்களாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மூன்று வருடங்களின் பின்னர் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் தனது சகோதரனையும், தாயையும் பறிகொடுத்த இவருக்கு தந்தையாரே சிறைச்சாலைக்கு வெளியில் துணையாக இருந்து வந்துள்ளார் எனவும், கடந்த டிசம்பர் மாதம் அவரும் உயிரிழந்ததையடுத்து, அவருடைய நலன்களைக் கவனிப்பதற்கு யாரும் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நடைபெறுகின்ற வழக்கு விசாரணைகளின் இயல்புக்கு அமைய தனக்கு எதிரான வழக்கு நீண்ட கால இடைவெளி கொண்டதாக தவணை இடப்படுவதாகவும், இதனால் வழக்கு எப்போது முடியும் என்று தெரியாத நிலையில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.