மாணவர்களின் கல்வி செயற்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் ஆசிரியர்கள்! யாழில் வீதிக்கு இறங்கிய மாணவர்கள்

Report Print Sumi in சமூகம்

யாழ். சித்தன்கேணி - பிளவத்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மாணவர்களின் கல்வி செயற்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்படும் இரு ஆசிரியர்களை இடமாற்றம் செய்யுமாறு கோரி போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தினை பாடசாலையின் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.

கவனயீர்ப்பு போராட்டம் பாடசாலைக்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது பேராட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்கள் கூறுகையில், ஆசிரியர்கள் மாணவர்களை தகாத வார்த்தைகளால் பேசுவதுடன், கற்றல் செயற்பாடுகளையும் அவர்கள் மேற்கொள்வதில்லை.

இந்த நிலையில், மாணவர்களுக்கு நன்றாக கல்வி புகட்டும் ஆசிரியர்களுக்கு வலயக் கல்வி திணைக்களத்தினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களை வழிநடத்த தவறும் குறித்த ஆசிரியர்களை இடமாற்றம் செய்யாது, ஏனைய ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது ஏன் என அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

அத்துடன், 200ஆவது வருடத்தை எட்டவுள்ள இந்த பாடசாலை பல தலைமுறைகளை உருவாக்கியுள்ளமையினால், பாடசாலையை மூடுவதற்கான ஏற்பாடுகளை நிறுத்துமாறும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.