முல்லைத்தீவு அளம்பில் துயிலுமில்லக்காணியை, 24ஆம் சிங்க ரெஜிமண்டுக்கு வழங்க முயற்சி!

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைபற்று பிரதேசசெயலாளர் பிரிவின் கீழ், அளம்பில் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள, அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்த தனியார் காணியினை 24ஆம் சிங்க ரெஜிமண்ட் இராணுவத்தினருக்கு கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த காணியை அளவீடு செய்து, 24ஆம் சிங்க ரெஜிமண்ட் இராணுவத்தினருக்கு பாரப்படுத்த, நில அளவைத் திணைக்களத்தினர் இன்றைய தினம் ஈடுப்பட்டுள்ளனர்.

அந்த காணியில் விதைக்கப்பட்ட மாவீரரின் பெற்றோர்கள் உட்பட்ட பிரதேச மக்கள் அதை தடுத்து நிறுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த காணியானது, காணி எடுத்தற் சட்டத்தின் மூலம் எடுத்துக்கொள்ளப்பட்டதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத் தனியார் காணியினை அளவிடுவதில் காணி உரிமையாளர்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும், பிரதேசசெயலகத்தின் உத்தரவின் பேரிலேயே தாம் அளவீடு செய்வதற்கு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதால் இன்னுமொரு நாளுக்கு நில அளவீட்டை செய்யுமாறு பிரதேசசெயலாளர் தெரிவித்தார். அத்துடன் நில அளவீட்டுக்கான நாள் பிற்போடப்பட்டமை தொடர்பில் மாவட்ட செயலருக்கும் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களின் சார்பில் நில அளவை உத்தியோகத்தருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்த மகஜரில்,

யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவேந்தும் இடத்தினைக் பொதுமக்களாகிய தாம் கோருவதாகவும், இக்காணி தற்போது அளவீடுசெய்யப்பட்டு இராணுவத்திற்கு வழங்கப்பட இருப்பதாகவும், எனவே குறித்த காணியில் தொடர்ந்தும் தாம் நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு நல்குமாறும் பொதுமக்களால் கோரப்பட்டுள்ளது.

பொதுமக்களின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி - சிறீஸ்கந்தராசவினால் நில அளவை உத்தியோகத்தரிடம் மகஜர் கையளிக்கப்பட்டதுடன், நில அளவீட்டாளர்களும், ஆற்பாட்டக்காரர்களும் அங்கிருந்து கலைந்தனர்.

மேலும் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா கருத்துத் தெரிவிக்கையில்,

இன்றைதினம் அளம்பில் பகுதியில் அமைந்துள்ள 24ஆவது சிங்க ரெஜிமண்ட் இராணுவ முகாமிற்கு காணி அளந்து பாரப்படுத்துவதற்கான முயற்சி இடம்பெற்றது. இருப்பினும் கறித்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த காணி போர்க்காலப் பகுதியில், இறந்த உறவுகள் புதைக்கப்பட்ட காணியாகும். இந்த காணியில் புதைக்கப்பட்டவர்களின் உறவுகள், பல காலமாக நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த 5ஏக்கர் காணியை பொது இடமாக அறிவித்து மக்களின் நினைவேந்தலுக்கு உரியவர்கள் ஒத்துழைப்புச் செய்யவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers