சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பெண்ணொருவருக்கு பாலியல் சேட்டை! சக உத்தியோகத்தர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை, மஹாதிவுல்வெவ பகுதியில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் கடமையாற்றும் பெண்ணொருவருக்கு பாலியல் சேட்டை புரிந்த சக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் அதே இடத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

சிவில் பாதுகாப்பு திணைக்கள மஹதிவுல்வெவ வலயத்தில் ஊழியர் ஒருவரின் மாமனார் மரணித்த நிலையில் அவரின் அன்னதான நிகழ்வு மற்றும் பிரித் ஓதும் வைபவம் நேற்றிரவு இடம் பெற்றிருந்தது.

அவ்விடத்துக்கு அனைத்து சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் சென்று பிரித் நிகழ்வை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வருகை தந்து கொண்டிருந்த போது சக ஊழியர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றதாகவும் இதே நேரம் ஐந்து நிமிடம் அருகிலுள்ள வயலைப் பார்த்துக்கொண்டு செல்வோம் எனவும் கூறிவிட்டு தன்னை அழைத்துச் சென்றதாகவும் அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாகவும் பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தரான அவ்சத ஹாமிகே சமன் குமாரி (45வயது) முறைப்பாடு செய்துள்ளார்.

இம் முறைப்பாட்டையடுத்து சக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.