நான் எவரையும் குற்றம் சொல்ல விரும்புவதில்லை! ஒஸ்லோ பிரதி மேயர் கம்ஷாயினி குணரட்ணம்

Report Print Murali Murali in சமூகம்

நான் எவரையும் குற்றம் சொல்ல விரும்புவதில்லை என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வேயின் ஒஸ்லோ மாநாகரின் பிரதி மேயர் கம்ஷாயினி குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “என்னைப் பெறுத்தவரையில் எந்தவொரு தேசத்திற்குப் போனாலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமவுரிமை இருக்க வேண்டுமென்றுதான் நான் நினைப்பது.

நான் நோர்வேயின் ஒஸ்லோ மாநாகர சபையில் கூட அங்கும் இருபாலாருக்கும் சமவுரிமை இருக்கவேண்டுமென்று தான் விரும்புகின்றேன். இதுவரைக்கும் அங்கும் சமவுரிமை 50 க்கு 50 வீதம் கிடைக்கவில்லை.

அதற்காக நான் கஷ்டப்பட்டு முயற்சிகள் எடுத்து வருகின்றேன். அதேபோல் நோர்வே பாராளுமன்றிலும் ஆண், பெண்கள் 50 க்கு 50 வீதம் இருக்கவேண்டுமென்றே விரும்புகின்றேன்.

எங்குபோனாலும் ஆண்களும் பெண்களும் சரிசமமாக இருக்க வேண்டுமென்று விரும்புகின்றேன். உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால் தற்போதைய ஊடகவியலாளர்கள் சந்திப்பிலும் கலந்துகொள்ள வந்துள்ளவர்கள் அனைவரும் ஆண்களாகவே உள்ளனர்.

அந்தவகையிலேயே நான் அனைத்து விடயங்களையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஆனால் நான் எவரையும் குற்றம் சொல்ல விரும்புவதில்லை. நாங்கள் தமிழர்கள். எங்கு போனாலும் அமைப்புகள், சங்கங்கள் உள்ளன அங்கும் பெண்களுக்கு சம பங்கு வழங்க வேண்டுமென்றே கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழீழ விடுதலைப்புலிகள் பெண்களுக்கு சரியானதொரு இடத்தை வழங்கவில்லை என்று நான் சொல்லவில்லை. நான் கூறியது எல்லா மட்டங்களிலும் அநேகமான பெண்கள் உள்ளனர்.

வளர்ச்சியடைந்து செல்லும் போது அதிகமான பெண்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென்று தான் தெரிவித்தேன். அதுவும் நான் பாராட்டுத் தெரிவித்ததன் பின்னர்தான் நான் அதையும் தெரிவித்திருந்தேன்.

குறை சொல்வதற்காக நான் எதையும் சொல்லவில்லை. நாங்கள் தமிழர்களை மேலும் வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்பதையே சுட்டிக்காட்டியிருந்தேன்.

விடுதலைப் புலிகள் பெண்களுக்கு சரியானதொரு இடத்தை கொடுத்திருந்தனர். எனினும், மேலும் தலைவிகள் வரலாம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.