பிரபல பாடசாலையில் ஆசிரியரின் மோசமான செயற்பாடுகள்? ஊடகவியலாளருக்கும் கொலை அச்சுறுத்தல்

Report Print Murali Murali in சமூகம்

நுவரெலியா இராகலை பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்தும், அந்த பாடசாலையின் ஆசிரியரின் மோசமான செயற்பாடுகள் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் தெரியவருவதாவது, “குறித்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் பாடசாலை சீருடை வவுச்சர்களை மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் அப்பாடசாலை மாணவர்கள் சிலருக்கு வவுச்சருக்கு பதிலாக சீருடை துணிகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், மிகவும் குறைந்த அளவு கொண்ட துணிகளையே அந்த ஆசிரியர் வழங்கியுள்ளதாக அறியமுடிகின்றது. இது பாடசாலை சீருடை தைப்பதற்கு போதுமான அளவு இல்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த துணியினைக்கொண்டு தைக்கப்பட்ட சீருடை மிகவும் சிறியதாக இருக்கின்றது என தெரிவித்து அந்த ஆசிரியர் மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும், மாணவர்களை பாடசாலைக்கு வரவிடாமல் செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

மேலும், அந்த பாடசாலையில் இருக்கும் சில மாணவர்களுக்கு கட்டாயத்தின் பேரில் சிறிய அளவை கொண்ட பாதணிகளை வழங்கிய ஆசிரியர், அதனை அணிந்து வராத மாணவர்களை அடித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

இதுவொருபுறமிருக்க, முறைகேடுகளில் ஈடுபடும் அவ் ஆசிரியர் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மாட்டுமே பாடசாலைக்கு வருவதாகவும், எனினும், அனைத்து நாட்களும் பாடசாலைக்கு வருகைதந்தமை போன்று கையெழுத்திடுவதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

அத்துடன், அந்த பாடசாலையில் இருக்கும் மாணவிகளிடம் குறித்த ஆசிரியர் தவறான முறையில் நடந்துகொள்வதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த ஆசியரினால் அந்த பாடசாலையின் மாணவர்கள் பலரும் இடையூறுகளை சந்தித்து வருவதாகவும், எனினும், குறித்த ஆசிரியரின் நடவடிக்கையில் இருந்து மாணவர்களை இரண்டு ஆசிரியர்கள் பாதுகாத்து வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

எனினும், இதில் ஒரு ஆசிரியருக்கு அழுத்தங்களை பிரயோகித்து அந்த பாடசாலையிலிருந்து விலக்கியுள்ளதாகவும், தற்போது மற்றைய ஆசிரியருக்கு தொடர் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

மேலும், அந்த ஆசிரியர் பாடசாலைகளில் படிப்பிக்காது வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

மேலும், குறித்த பாடசாலையில் தரம் ஒன்று முதல் ஐந்து வரைக்குமான மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுகள் குறித்த ஆசிரியரின் வீட்டில் இருந்தே வழங்கப்படுகின்றது.

எனினும், தரமற்ற உணவுகளையே அவர் வழங்கி வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே, குறித்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பாடசாலை மாணவி ஒருவர் அந்த ஆசியரின் பெயரை சுட்டிக்காட்டி சமூகவலைதளங்களில் குரல் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து, விடையத்தினை அறிந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர் உடன் நடவடிக்கை எடுத்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது அந்த குற்றச்சாட்டுக்களை பாடசாலையின் அதிபர் மறுத்திருந்தார்.

எனினும், குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர் என அடையாளப்படுத்திக்கொண்ட சிலர் தொலைபேசியில் குறித்த ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இது குறித்த செய்திகளை வெளியிட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த தரப்பினர் ஊடகவிலாளரை அச்சுறுத்தியுள்ளனர். அத்துடன், குறித்த ஊடகவியலாளரை மிகவும் தகாத வார்த்தைகளினால் அந்த தரப்பினர் பேசியுள்ளனர்.

இதேவேளை, கடந்த காலங்களில் குறித்த பகுதியில் சில மோசமான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு பணம் கேட்டமை, நூறு வீதம் பெறுபேறுகளை காண்பிப்பதற்கான மாணவர்கள் சிலரை பரீட்சை எழுத விடாமல் செய்தமை உள்ளிட்ட மோசமான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உதவியுடன் அண்மையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.