விறகு விற்பனை செய்யும் வாகனத்தில் பாண் விற்பனை: நீதிமன்றம் விதித்த தீர்ப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் பிரபல்யமான வெதுப்பக உற்பத்தி நிலையத்தின் உரிமையாளரிடம் தண்டப் பணமாக 30,000 ரூபாய் அறவிட உத்தரவிட்டுள்ளது.

குறித்த வெதுப்பகத்திற்கு விறகு ஏற்ற பயன்படுத்தப்படும் பட்டா ரக வாகனத்தில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

வாகனத்தை உரிய முறையில் துப்பரவு செய்யாது, உணவுப் பொருட்களை அதில் களஞ்சியப்படுத்தி தரணிக்குளம் பகுதியில் விற்பனை செய்தமை தொடர்பில் வெதுப்பகத்தின் உரிமையாளருக்கு எதிராக ஓமந்தை பொது சுகாதாரப் பரிசோதகரினால் வவுனியா நீதிமன்றத்தில் கடந்த 13.10.2018 அன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுத்தம் செய்யாமல் விறகு ஏற்றிச் சென்ற பட்டா ரக வாகனத்தில் வெதுப்பக உற்பத்தி உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை, காலாவதித் திகதி முடிவடையும் முன்னரே பூஞ்சணம் பிடித்த பாணை விற்பனை செய்தமை, மருத்துவ தகுதிச்சான்றிதழ் இன்றி வாகனத்தைச் செலுத்தியமை, வெற்றுக் கைகளினால் உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை, உரிய அனுமதிப்பத்திரமின்றி உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டமை போன்ற ஆறு குற்றச்சாட்டுக்கள் வாகன சாரதிக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வழக்குகள் நேற்றைய தினம் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது எதிராளி குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதற்கு இணங்க வாகன சாரதி மீதான ஆறு குற்றச்சாட்டுகளுக்கும் ஒரு குற்றச்சாட்டிற்கு தலா 4,000 ரூபாய் வீதம் மொத்தமாக 24,000 ரூபாவும், உரிமையாளருக்கு 6,000 ரூபாய் வீதம் மொத்தமாக 30,000 ரூபாவும் நீதிமன்றத்தினால் தண்டமாக விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைப்பற்றப்பட்ட உணவுப்பொருட்களை அழித்து விடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை காலாவதி திகதி முடிவடைந்த 10 குளிர்பானம் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த வர்த்தகர் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டிற்கும் நீதிமன்றம் 5,000 ரூபாய் அபராதம் விதித்திருந்தாக ஓமந்தை பொது சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.