தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

Report Print Thiru in சமூகம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு மலையகத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒத்துழைக்க வேண்டியது கட்டாயமானது என இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது சிலர் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் மாத்திரம் தான் சம்பள உயர்வு பற்றி பேச வேண்டும். எங்களுக்கு தெரியாது, அவர்கள் தான் அதற்கு எல்லாம் பொறுப்பு என்று சொல்லி தப்பித்து வருவதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

பெருந்தோட்டங்களில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் நலன்சார் விடயங்கள் உட்பட தொழில் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அவர்கள் தொழிலாளர்களிடம் இருந்து சந்தாவையும் பெற்று வருகின்றனர். அரசியலையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் தொழிலாளர்கள் சார்பான வேலைகளையும், உரிமைகளையும் பெற்று கொடுக்க வேண்டியதும் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஒத்துழைக்க வேண்டியதும் கட்டாயமானது.

இந்த நிலையில் இவர்கள் எங்களின் பொறுப்பு என்று தப்பித்து கொள்ளவும் முடியாது. தற்போது பெருந்தோட்ட கம்பனிகள் தொழிலாளர்களுக்கு மூன்று வருடகால சம்பள அதிகரிப்பு ஒப்பந்தத்திற்கு முன்வந்து முதல் வருட சம்பள அதிகரிப்பு 625.00 ரூபாவும், இரண்டாம் வருடம் சம்பள அதிகரிப்பு 650.00 ரூபாவும், மூன்றாம் வருடம் சம்பள அதிகரிப்பு 675.00 ரூபாவும் அதிகரிப்பதாக ஊக்குவிப்பு தொகை 140.00 ரூபாவும் 80.00 ரூபாய் வரவு கொடுப்பனவும் 30.00 ரூபாய் விலை கொடுப்பனவும், மேலதிகமாக எடுக்கும் கொழுந்திற்கு கிலோகிராம் ஒன்றுக்கு 45.00 ரூபாவும் வழங்க முன்வந்துள்ளனர்.

இது சம்பள உயர்வு பேச்சுவார்த்தையின் ஒரு படி உயர்வாக இருந்த போதும். இதற்கு நான் ஒத்துக் கொள்ளவில்லை. இதனை பெருந்தோட்ட தொழிலாளர்களிடம் கூறி அவர்களின் முடிவின் படி அடுத்த கட்டத்திற்கு செல்லலாம் என்று எண்ணி எழும்பி வந்து விட்டோம்.

இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் முடிவும் அதுவே. எது எவ்வாறாயினும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மலையகத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து செயற்பட்டு சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

இந் நிலையில் தொழிற்சங்கங்கள் முரணாக கருத்து தெரிவிப்பது கவலைக்குரிய விடயமாகும் என தெரிவித்துள்ளார்.

Latest Offers