அரசாங்கத்தின் தீர்மானம்! நாடு நெல் 38 ரூபா, சம்பா நெல் 41 ரூபா

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக அறுவடை நெல் கொள்வனவுகள் அறுவடை தொடக்கத்தில் இருந்தே நடைபெறவுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதற்கான முடிவுகள் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரின் அறிவுறுத்தல்களுக்கமைவாக ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெல் அறுவடை கொள்வனவு குறித்து மாவட்ட செலயகத்தில் நேற்று பகல் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் வைத்தே சுதர்சினி சிறிகாந்த் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

வருடா வருடம் ஏற்படும் விவசாயிகளின் நெல் விற்பனைப் பிரச்சினைகளைத் தவிர்க்கும் வகையில் அரசாங்க அதிபரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வவுணதீவு, மணல்பிட்டி, தும்பங்கேணி, கரடியனாறு, புலிபாய்ந்தகல், கஜுவத்தை ஆகிய பிரதேசங்களிலுள்ள களஞ்சியசாலைகளில் நெல் சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவுகள் நடைபெறவுள்ளன.

அத்துடன், நடமாடும் நிலையங்கள் ஊடாகவும் பல பிரதேசங்களில் கொள்வனவுகள் மேற்கொள்ளப்படும் என்று நெல் சந்தைப்படுத்தும் சபையின் பிராந்திய முகாமையாளர் டப்ளியூ.எம்.என்.ஆர்.வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

விவசாயிகள் நெல் கொள்வனவு நிலையத்தில் நெல்லை வழங்கி நியாயமான விலையினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நாடு நெல் 38 ரூபாய்க்கும், சம்பா நெல் 41 ரூபாய்க்கும் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில் இதற்கான விண்ணப்பங்களை களஞ்சியசாலைகளில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு விவசாயிடம் இருந்து 2000 கிலோகிராம் கொள்வனவு செய்யபபடும். சரியான ஈர்ப்பதனுடையதாக நெல் விவசாயிகளால் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்தத் தொகையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட விவசாயப்பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட விவசாயப்பணிப்பாளர் வை.பி.இக்பால், மாவட்ட விவசாய பிரதிப்பணிப்பாளர் வி.பேரின்பராசா, பிரதேச செயலாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், பெரும்பாக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Latest Offers