மண் அகழ்வின் காரணமாக தமது வாழ்விடங்களை இழந்து வரும் தரணிக்குளம் மக்கள்!

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - தரணிக்குளத்தில் மக்கள் வாழும் குடியிருப்பு பகுதியிலிருந்து மணல் அகழ்வதற்கு புதிய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

தரணிக்குளம் புதிய கிராமத்தில் சுமார் 700 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அக்கிராமத்தின் நடுவே மக்கள் வாழும் பகுதியில் உள்ள காணிகளில் இருந்து தினமும் பல டிப்பர்களில் மண் அகழப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றது.

குறித்த பகுதியில் உள்ள மக்களது காணிகளுக்கு இன்னும் அரசாங்கத்தால் காணி உறுதிகள் வழங்கப்படாத நிலையில் குறித்த பகுதியில் இருந்த மக்களுக்கு சொந்தமான சில காணிகளை மதபோதகர் ஒருவர் சிறிய தொகைப் பணம் கொடுத்து பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது காணிகளில் கச்சான் செய்கை மேற்கொள்ளப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கப்போவதாக தெரிவித்தே காணிகளைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில் சில காணிகள் விற்பனை செய்யப்பட்டு 3 வருடங்கள் கடந்த போதிலும் கச்சான் உற்பத்திக்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது குறித்த காணியில் மண் அகழ்வு இடம்பெற்று வருவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மக்கள் வாழும் பகுதியில் தினமும் 10 இற்கும் மேற்பட்ட டிப்பர்கள் மண்ணிணை அகழ்ந்து செல்வதால் அப்பகுதியில் பாரிய குழிகள் உருவாகி வருவதுடன், அருகில் உள்ள குடும்பங்களின் வாழிடங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த டிப்பர் வாகனத்தின் காரணமாக வீதிகள் பயன்படுத்த முடியாத நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுவதாகவும், போக்குவரத்து செய்வதில் பாரிய பிரச்சனைகளை எதிர் நோக்குவதாகவும், குறித்த மண் அகழ்வை நிறுத்தி தமது கிராமத்தை பாதுகாக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர் து.நடராஜசிங்கமிடம் கேட்ட போது, குறித்த மண் அகழ்வுக்கு மத்திய அரசாங்கத்தின் ஊடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த அகழ்வு பணி முடிவடைந்ததும் பிரதேச சபையால் மக்களது வீதிகள் புனரமைத்துக் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Latest Offers