மோட்டார் சைக்கிள் விபத்தில் சிவில் பாதுகாப்பு படை வீரர் மரணம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - ஹொரவபொத்தான பிரதான வீதி மொரவெவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த சிவில் பாதுகாப்பு படை வீரர் நாமல்வத்தை ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த பீ. ஜீ. தர்மசேன (58 வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

ஹொரவபொத்தான பகுதியிலிருந்து கிண்ணியாவுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபருடன் சிவில் பாதுகாப்பு படை வீரர் குறுக்கு வீதியினூடாக வருகை தந்து பிரதான வீதியினூடாக வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை மோட்டார் சைக்கிளில் வந்த ஹொரவ்பொத்தான, நிக்கவெவ பகுதியைச் சேர்ந்த எஸ். ஏ. ரகுமான் (36வயது) நபர் படுகாயமடைந்த நிலையில் மஹாதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய இரண்டு மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் உயிரிழந்த சிவில் பாதுகாப்பு படை வீரரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Latest Offers