மேற்குலக நாடுகளைப் போன்று இலங்கையிலும் ஈ- ஹெல்த் அட்டையை வழங்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள புதிய நடைமுறை, நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
6 மாதங்களுக்குள் இந்த அட்டை அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும். இந்தியாவின் ஆந்திர பிரதேசத்திலுள்ள நிறுவனம் ஒன்றே இலங்கையில் இந்த அட்டையை வழங்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இந்த அட்டை மூலம் யாராவது ஒரு நோயாளியின் நோய் தொடர்பான முழுமையான அறிக்கை இந்த அட்டையில் உள்ளடக்கப்படும் என்பதால், குறித்த நபர் நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலுமுள்ள வைத்தியரிடம் விரைவாக சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறை வைத்தியசாலையில் ஈ- ஹெல்த் அட்டையை வழங்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஜனாதிபதி தலைமையில் கொழும்பு தாமரைத் தடாகத்தில் ஈ-ஹெல்த் அட்டை இலங்கையில் முதன்முதல் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.