வாழைச்சேனை ஓட்டமாவடி காளி கோயில் காணியின் உரிமை மாற்றப்பட்டது எப்படி..

Report Print Sujitha Sri in சமூகம்

ஓட்டமாவடி காளி கோயில் காணி உரிமையாளரிடம் இருந்து பணக்கொடுக்கலின் மூலமாக காணியின் உரிமை மாற்றப்பட்டதாக தெரியவருகிறது.

இந்த விடயத்தை ஓட்டமாவடி பிரதேசத்தின் மூத்த பிரஜைகளுள் ஓருவரும், நன்கறியப்பட்ட எழுத்தாளரும், குறித்த சர்ச்சைக்குரிய காணி விவகாரத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களுள் ஓருவருமான எஸ்.எல்.எம்.ஹனிபா தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி கோயில் காணி தொடர்பாக கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநரான ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருந்த கருத்துக்களைக் கொண்ட காணொளி வைரலாகியிருந்தது.

இவ்வாறான நிலையில் முகப்புத்தகத்தில் இடப்பட்டுள்ள பதிவொன்றிலேயே எஸ்.எல்.எம்.ஹனிபா மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்துள்ளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பதிவில் மேலும்,

ஓட்டமாவடி காளி கோயில் காணி அதன் உரிமையாளரிடமிருந்து பணக்கொடுக்கலின் மூலமாக உரிமை மாற்றம் பெற்றதாகவும், அந்தப் பணத் தொகையினைப் பெற்றுக் கொண்டவர்கள் வேறொரு கோயிலின் நிர்மாணப் பணிகளுக்காக அதனை கொடுத்தனர் என்றும் சொல்கின்றார்.

இதனடிப்படையில் பார்க்கும்போது ஹிஸ்புல்லாஹ் வெளியிட்டிருக்கும் கருத்தானது தேர்தல் காலமொன்றில் குறித்தவொரு கருத்து வெளியிடப்பட்டது. அக் கருத்து தமிழர்கள் மத்தியில் இன்று வரை விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இவ்வாறான காயங்கள் இரண்டு பக்கங்களிலும் இருக்கின்றன. எனது சிறு பராயத்தில் (1985 க்கு முன்பு) அறுவடைக் காலங்களில் கோப்பாய்வெளி, இலுப்படிச்சேனை போன்ற பிரதேசங்களில் அமையப் பெற்றிருந்த பள்ளிவாயல்களில் சில நிகழ்வுகளை நடத்தி அங்கு நார்சா (சமைத்த உணவு) வழங்குவார்கள்.

அதில் தமிழ் முஸ்லிம் இரு சமூக மக்களும் கலந்து கொள்வர். இன்று அந்தப் பள்ளிவாயல்கள் இருந்த தடயமே இல்லை. சில கற்கள் மாத்திரம் காணக் கிடைக்கின்றன.

இவ்வாறு இரு சமூகங்களுக்குள்ளும் ஆறா வடுக்கள் நிறைந்து கிடக்கின்றன. அவை இரு தரப்பு சிவில் சமூக பிரதிநிதிகளாலும் பேசித் தீர்க்கப்படல் வேண்டும்.

இனத்துவ அரசியல் கூர்மையடைவதற்கு முன்பிருந்து ஒரு சுமூகமான இன உறவுச் சூழலில் துவங்கி இன்று வரை நிகழ்ந்திருக்கும் மாற்றங்களை அவதானித்து வந்திருக்கும் எஸ்.எல்.எம்.ஹனிபா போன்ற மூத்த பிரஜைகள் விரல் விட்டு எண்ணக் கூடிய சொற்ப தொகையினரே இரு சமூகங்களுக்குள்ளும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

எனவே, அவர்களின் காலத்திலேயே இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு தமிழ், முஸ்லிம் உறவு பலப்படுத்தப்படல் வேண்டும். அதற்கான உடனடி தேவை தற்போது ஏற்பட்டுள்ளதாகவே கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.