தமிழக மீனவரின் சடலத்தை இனம் காட்டிய சக மீனவர்கள்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்களின் சடலத்தை சக மீனவர்கள் அடையாளம் காட்டினார்கள்.

தமிழகத்தில் இருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை மீன் பிடிக்க புறப்பட்ட இராமநாதபுரத்தை சேர்ந்த கருப்பையா மாரிச்சாமி (வயது 55) என்பவரின் சடலத்தை காங்கேசன்துறை பொலிசார் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

காங்கேசன்துறை பொலிசாருக்கு மீனவர் சடலமாக மீட்கப்பட்ட தகவலை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை காங்கேசன்துறை கடற்படையினர் அறிவித்துள்ளனர். அது தொடர்பில் பொலிசார் மல்லாகம் நீதிவானுக்கு அறிவித்தனர்.

பொலிசாரும் நீதிவானும் இரவு காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு சென்றனர். சடலத்தை பார்வையிட்ட நீதிவான் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் உயிரிழந்த மீனவரின் படகில் இருந்த ஏனைய மூன்று மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்து காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைத்திருந்தனர். குறித்த மூன்று மீனவர்களும் இன்றைய தினம் யாழ்.போதனா வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரி ந. மயூதரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். அத்துடன் குறித்த மூன்று மீனவர்களும் உயிரிழந்த மீனவரின் சடலத்தை அடையாளம் காட்டினார்கள்.