இரு குழுக்களுடையில் மோதல்: உயர்தர வகுப்பு மாணவன் படுகாயம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை யூனிபீல்ட் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் உயர்தரம் படிக்கும் மாணவன் படுகாயமடைந்துள்ளான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை யூனிபீல்ட் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன் போது உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.படுகாயமடைந்த மாணவன் கொட்டகலை பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்றுவரும் செல்லசாமி சிவராஜ் (வயது 19) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அதே தொடர் குடியிருப்பில் வசித்து வரும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் தனது தாயுடன் வீட்டில் பஜனை செய்பவர்களுக்கு சாப்பாடு சமைத்து எடுத்து செல்ல முற்பட்ட போது மாணவனுடன் மதுபோதையில் இருந்த நபர் வீண் சண்டைக்கு இழுத்து கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

அம் மாணவனின் தந்தை 20 வருடங்களுக்கு முன் உயிரிழந்துள்ளதாகவும், தாயின் பராமரிப்பிலேயே இந்த மாணவன் வாழ்ந்து வருவதாகவும் இந்த சம்பவத்திற்கு பழைய குரோதம் ஒன்றே காரணம் என்றும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.

இது குறித்து தாய் கருத்து தெரிவிக்கையில்,

தனது மகன் பஜனை செய்பவர்களுக்கு உணவு சமைத்து விட்டு அதனை எடுத்து செல்ல முற்பட்ட போது மது போதையில் இருந்த நபர் தன்னையும் தாக்கி மகனையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாகவும் இவர் தொடர்ந்தும் தங்களுடன் மது போதையில் சண்டையிடுவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, தங்களின் வீடும் அடித்து நொறுக்கப்பட்டதாகவம் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.