நாடெங்கிலும் களைகட்டியுள்ள பொங்கல் கொண்டாட்டம்

Report Print Kumar in சமூகம்

உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று நாடெங்கிலும் இன, மத வேறுபாடின்றி பல்வேறு இடங்களில் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆலயங்களிலும் காலையில் பொங்கல் பொங்கி, மக்கள் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்து ஆலயங்கள், தேவாலயங்கள், வீடுகள், வர்த்த நிலையங்கள் என பல பகுதிகளிலும் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டு வருகின்றன.

கிளிநொச்சி

முறிகண்டி, குழந்தை இயேசு ஆலயத்தின் வருடாந்த திருவிழாவும் பொங்கல் நிகழ்வும் இன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

தைத்திருநாளை முன்னிட்டு குறித்த ஆலயத்தில் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டதுடன் பொங்கலும் பகிரப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பொங்கல் நிகழ்வு கிளிநொச்சி 57ஆவது படைப்பிரிவினரின் ஏற்பாட்டில்இடம்பெற்றுள்ளது.

வவுனியா

இறம்பைக்குளம், அந்தோனியார் ஆலயத்தில் தைத்திருநாள் கொண்டாடப்பட்டுள்ளது.

இதன் போது கிறிஸ்தவ இளைஞர்கள் மற்றும் பங்குத்தந்தையினால் பொங்கல் பொங்கப்பட்டுள்ளது.

வவுனியா, பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினாலும் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினாலும் பொங்கல் பொங்கி பலகாரங்கள் பரிமாறப்பட்டுள்ளது.

மன்னார்

மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களிலும் மற்றும் கத்தோலிக்க தேவாலயங்களில் தைப்பொங்கல் நிகழ்வு இடம்பெற்றதோடு, விசேட வழிபாடுகளும் இடம்பெற்றுள்ளன.

திருகோணமலை

மூதூர், பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்று தைப்பொங்கல் தினம் மகிழ்ச்சிகரமாக கொண்டாடப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பூர், தம்பலாகாமம் போன்ற பகுதிகளிலும் தைப்பொங்கல் தின நிகழ்வுகள் களைகட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு, அமிர்கழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பூஜைகள் நடைபெற்றுள்ளன.

ஆலயத்தின் முன்பாக பொங்கல் பொங்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு - தேற்றாத்தீவு, கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று காலை தைத்திருநாள் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.

கல்முனை

கல்முனை மாநகரில் சிறப்புடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை அமைப்பினரின் ஏற்பாட்டில் தை பொங்கல் தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

கொழும்பு

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் உள்ள அரச வங்கி ஒன்றில் விஷேட தைத்திருநாள் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

கொழும்பு, பென்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்திலும் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் கொழும்பு, புனித வியாகுல மாதா ஆலயத்திலும் தைப்பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

அம்பாறை

காரைதீவில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் இன்று தைப்பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்வு வங்கி முகாமையாளர் தி.உமாசங்கரன் தலைமையில் இடம்பெற்றதுடன் இதில் வங்கி ஊழியர்கள், வங்கியின் வாடிக்கையாளர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


மேலதிக தகவல்கள் - முபாரக், ஆஷிக், சதீஷ், யது, நேசன், ஆகாஷ்

Latest Offers