வவுனியா புதூர் பகுதியில் ஆயுதம் மீட்பு தொடர்பில் 7 பேர் கைது

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, புதூர் பகுதியில் பிஸ்ரல் மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை வீசிவிட்டு தப்பியோடிய நபர் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் புளியங்குளம் பொலிசார் இச் சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.

கடந்த 2 ஆம் திகதி புளியங்குளம், புதூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் காணப்படுவதாக புளியங்குளம் பொலிசாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதிக்கு சிவில் உடையில் நான்கு பொலிசார் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதன்போது அவ்வீதியில் சென்ற இனந்தெரியாத நபர் ஒருவர் தனது கையில் வைத்திருந்த பொதியை தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளார்.

தாம் அவரைத் துரத்திச் சென்ற போதும் அவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர். மறுநாள் காலையில் இருந்து மதியம் வரை இராணுவம் பொலிசார் இணைந்து அப்பகுதியில் சுற்றி வளைப்பு மேற்கொண்டு தேடுதல் நடத்தியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த பொதியை பொலிசார் பார்வையிட்டபோது அதனுள் கைத்துப்பாக்கி அதற்குரிய ரவைகள், கைக்குண்டுகள் நான்கு, ஸ்மாட் கைத்தொலைபேசிகள் 2 அதற்குரிய மின்கலத்துடனான மின் வழங்கி என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் 7 பேரை கைது செய்துள்ளனர்.

இவர்களை வவுனியா மாவட்ட நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவர் உட்பட ஐவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் தமது கட்டுப்பாட்டில் எடுத்து தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.