வவுனியா காணிப் பிணக்குகள்: மத்தியஸ்தர் சபையிடம் 370 முறைப்பாடுகள்

Report Print Thileepan Thileepan in சமூகம்

காணிப் பிணக்குகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முகமாக 370 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபை தவிசாளர் இரட்ணசிங்கம் நவரட்ணம் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் இன்று தெரிவித்ததாவது,

வவுனியா மாவட்ட காணிப் பிணக்குகளுக்கு விரைவாகவும், சுமுகமாகவும் தீர்வு காணும் முகமாக நீதி அமைச்சின் கீழ் மத்தியஸ்தர் சபை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையிடம் பிணக்குகளுக்கு தீர்வு காணுமாறு இதுவரை 370 முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

அம்முறைப்பாடுகள் தொடர்பாக விரைவில் இரு தரப்புக்களையும் அழைத்து கலந்துரையாடப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மேலும் காணிப் பிணக்குகள் தொடர்பான விபரங்கள் இருப்பின் எம்மிடம் சமர்ப்பிக்க முடியும்.

பெற்றுக் கொள்ளப்படும் பிணக்குகள் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், காணிப் பிணக்குகளை நேரடியாக அல்லது தபாலில் இ.நவரட்ணம், தவிசாளர், விசேட காணி மத்தியஸ்தர் சபை, இல 384/1, மன்னார் வீதி, வேப்பங்குளம், வவுனியா என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.