பாடசாலையின் அலுவலக கணனி அறைக்குத் தீவைப்பு

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு மத்தி வலயத்தின் ஏறாவூர் கோட்டப் பிரிவிலுள்ள மீராகேணி பஷீர் சேகுதாவூத் வித்தியாலயத்தின் அலுவலக கணினி அறைக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ள இச்சம்பவம்பற்றி அப்பாடசாலையின் அதிபர் ஏ.எல். பாறூக் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.

திங்கட் கிழமை மாலை வகுப்புக்கள் நடாத்தப்பட்டு பூட்டப்பட்ட பாடசாலையை ஆசிரியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை காலை 8.50 மணியளவில் சென்று பார்த்தபோது அங்கு அலுவலக அறையிலிருந்து புகை வெளி வருவதைக் கண்டு அதிபருக்கு அறிவித்துள்ளார்.

அவ்வேளையில் அந்த அறையைத் திறந்து பார்த்தபோது அங்குள்ள உபகரணங்களும் தளவாடங்களும் எரிந்து கொண்டிருந்துள்ளன.

பாடசாலை அலுவலக அறையின் பின் பக்கமாகப் பொருத்தப்பட்டிருந்த சாளரத்தின் வழியாக மண்ணெண்ணையை ஊற்றி தீ வைக்கப்பட்டிருப்பதாகவும் இதனால், கணினி, ப்ரின்டர் (அச்சிடும் கருவி) மாணவர் வரவுப் பதிவேடு இடாப்புக்கள், பதிவுப் கொப்பிகள், இருக்கைகள் தளவாடங்கள், உபகரணங்கள் என்பவை உட்பட ஆவணங்களும் எரிக்கப்பட்டுள்ளதாகவும் பாடசாலை அதிபர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.