சிறைக் கைதிகளை விரட்டி விரட்டி தாக்கும் பொலிஸார்! வெளியானது சிசிடிவி காணொளி

Report Print Ajith Ajith in சமூகம்

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகளை காவலர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பில் சிறைக்கைதிகளை பாதுகாக்கும் குழு இன்று இந்த காணொளியை செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டது.

அதில், வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள சிறைக்கைதிகள் சிலரை காவலர்கள் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

கடந்த காலம் முழுவதும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சித்திரவதைகளை எதிர்நோக்கி வந்தனர். கைதிகள் அனைவரும் சந்தேக நபர்கள் எனவும் அவர்களை தாக்குவது மிகவும் கொடூரமானது என கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் திகதி அங்குகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறையில் இருக்கும் கைதிகளை பார்வையிட வரும் உறவினர்களின் ஆடைகளை விசேட அதிரடிப்படையினர் களைந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த நிலைமைக்கு சிறைச்சாலை அத்தியட்சகர் முற்றாக பொறுப்புக் கூற வேண்டும் என கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் செயலாளர் தினேஷ் நந்திமால் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை அத்தியட்சகரே, ஆர்ப்பாட்டம் நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார். அதிரடிப்படையினர் உறவினர்களை நிர்வாணப்படுத்தியுள்ளனர். அத்துடன் சிறைச்சாலை உணவகத்தை உடைக்கவும் சிறைச்சாலை அத்தியட்சகரே கைதிகளை தூண்டியுள்ளார்.

சிறைச்சாலை அத்தியட்சகரின் தந்திரத்தை புரிந்துக்கொண்ட கைதிகள் அரச உடமைகளை சேதப்படுத்துவதை நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து சிறைச்சாலை அத்தியட்சகரை நீக்குமாறு கோரி கைதிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் எனவும் தினேஷ் நந்திமால் குறிப்பிட்டுள்ளார்.

சிறைக்கைதிகள், ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய பின்னரே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் எப்போது இடம்பெற்றது என்ற விடயம் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து சிறைச்சாலை அத்தியட்சகரை நீக்குமாறு கோரி கைதிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் எனவும் தினேஷ் நந்திமால் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே கைதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த மூவரடங்கிய குழுவை நியமித்துள்ள அமைச்சர் தலதா அத்துகோரள, உடனடியாக அறிக்கையை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.