மக்களின் உயிருடன் விளையாடாதே: இரணை இலுப்பைகுளம் மக்கள் ஆர்ப்பாட்டம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலகத்திற்குட்பட்டதும் வவுனியாவின் எல்லைக் கிராமமுமான இரணைஇலுப்பைகுளம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு நிரந்தரமாக வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறு கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்திருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது ஆரம்ப வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது. இதன்போது மத்திய, மாகாண அரசுகளே எமது வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியரை நியமி, எமது கிராம மக்களின் உயிருடன் விளையாடதோ, அரசே எங்கள் ஊரை நோயால் ஊனமாக்காதே, அரசாங்கமே இந்த பிரதேச மக்களின் சுகாதார பிரச்சனைக்கு எப்போது தீர்வு, சுகாதார அமைச்சரே எங்கள் சுகாதாரம் காக்க வைத்தியரை நியமனம் செய் என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கருத்து தெரிவித்த பொதுமக்கள் கடந்த ஒரு மாதகாலமாக எமது வைத்தியசாலைக்கு வைத்தியர் நியமிக்கப்படவில்லை. இதனால் மாதாந்த மருத்துவ சேவையை பெற்றுகொள்ளும் 200 ற்கும் மேற்பட்டோர் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு வருடங்களாக வைத்தியர் ஒருவர் நியமிக்கபட்டிருந்த போதும் அவர் தற்போது இடமாற்றம் பெற்றுசென்றுள்ளார்.

எமது கிராமம் மிகவும் பின்தங்கிய பகுதியாக காணப்படுவதுடன் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட கிராமம் ஆகும். மீள்குடியேற்றம் செய்யப்பட்ட காலப்பகுதி முதல் நிரந்தரமாக ஒரு வைத்தியர் நியமிக்கப்படவில்லை.

26 கிராமங்களை சேர்ந்த மக்கள் குறித்த ஆரம்ப சுகாதார வைத்தியலை நியத்தால் பயன்பெற்று வருகின்றனர். தற்போது வைத்தியர் இன்மையால் நீண்டதூரம் சென்று வவுனியா மற்றும் பூவரசங்குளம் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளிற்கு சென்றே சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டியிருக்கிறது.

அவசர நோயாளிகளை இங்கு அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளிக்கபட்ட பின்னர் அம்புலன்ஸ் மூலம் வவுனியாவிற்கு அழைத்து செல்லபடுகிறது. வைத்தியர் இன்மையால் அம்புலன்ஸ்சில் கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் வவுனியாவிற்கு சென்றால் அதிகபணச் செலவு ஏற்படுகின்றது.

குறிப்பாக கர்ப்பிணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் கர்ப்பிணி ஒருவருக்கு முச்சக்கரவண்டியில் குழந்தையும் பிறந்துள்ளது.

எனவே எமது நிலையை கருத்தில் கொண்டு நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறு கோருவதுடன் தற்காலிகமாக முன்னர் கடமையாற்றியவரையாவது மீண்டும் நியமிக்குமாறு வேண்டுகோள் முன்வைப்பதுடன், வைத்தியசாலையை தரமுயர்த்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுகொண்டிருந்த போது அப்பகுதியால் வருகை தந்த குறித்த வட்டாரத்தின் மாந்தை மேற்கு பிரதேசபையின் உறுப்பினர் தனது வாகனத்தில் இருந்து இறங்காமல் ஆர்ப்பாட்டகாரர்களுடன் சில வினாடிகள் பேசிவிட்டு அங்கிருந்து சென்றார். குறித்த சம்பவம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடத்தில் விசனத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.