உலகிற்கே வேளாண்மையை கற்றுக்கொடுத்தது தமிழினமாகும்: எம்.உதயகுமார்

Report Print Kumar in சமூகம்

உலகிற்கே வேளாண்மையை கற்றுக்கொடுத்த இனம் தமிழினமாகும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - போரதீவுப்பற்று, பலாச்சோலையில் இன்று காலை தைத்திருநாள் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட பொங்கல் விழாவினுடைய இரண்டாவது பொங்கல் விழாவாக இவ்விழாவை நாங்கள் ஒழுங்கு செய்திருக்கின்றோம். கடந்த ஆண்டு மட்டக்களப்பு நகரிலே இவ்வாறான பண்பாட்டு, கலாச்சார விழுமியங்களுடன் இணைந்த வகையிலே பொங்கல் விழாவினை வெகுசிறப்பாக நாங்கள் நடத்தியிருந்தோம்.

எங்களுடைய பாரம்பரிய முறைகளை நகர மக்களுக்கு கொண்டு சேர்க்கின்ற விதமாக நாங்கள் அவ்விழாவினை நடத்தியிருந்தோம்.

இன்று இந்த நகரத்திலே நீர்வளமும், நிலவளமும் நிறைந்து குறிஞ்சி,முல்லை,மருதம் என மூவகை நிலங்களையும் உள்ளடக்கியதான இந்த கருணைமலைப் பிள்ளையார் ஆலய முன்றலிலே இவ்விழாவை நடத்துவதில் நாங்கள் பெருமையடைகின்றோம்.

பொங்கல் விழாவானது உழவர் பெருவிழாவாகும். உலகின் இயக்கத்துக்கெல்லாம் காரணகர்த்தாவாகிய சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துகின்ற விழாவாகும். தமிழர் பண்பாட்டிற்கு அடையாளமான விழாவாகும்.

நாம் வாழ்வில் பயன்படுத்துகின்ற விலங்குகள், உபகரணங்கள் போன்ற அனைத்திற்கும் நன்றி செலுத்துகின்ற ஒரு விழாவாகும். கலையும் பண்பாடும் வாழ்கின்ற இந்த மண்ணிலே இவ்விழாவை நடத்துவதில் நாங்கள் பெருமையடைகின்றோம்.

உலகிற்கே வேளாண்மையை கற்றுக்கொடுத்த இனம் தமிழினமாகும்.

அப்படியான உழவர்கள் வாழ்கின்ற இந்த மண்ணிலே இவ்விழாவினை நாங்கள் நடத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டபோது பல்வேறு உதவிகள் எமக்கு கிடைத்தது. அதற்காக இந்த ஊர் மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த விழாவினை நாங்கள் ஏற்பாடு செய்ததன் நோக்கம் என்னவெனில் எமது இளைய சமுதாயமானது எங்களுடைய பாரம்பரியங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும், அதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதாகும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் கலந்துகொண்டார்.

Latest Offers