நாட்டில் ஏற்பட்டுள்ள யுத்தம் மற்றும் அனர்த்தம் என்பனவற்றினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கல்வி, பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - செங்கலடி, புலயவெளி கிராமத்தின் அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
மனிதநேயம் மிக்க, மனிதாபிமான மனிதர்களைக் கொண்ட புலம்பெயர் அமைப்புக்களின் சமூக சிந்தனை சிறப்பானதாகும்.
நாட்டில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் அனர்த்தம் என்பனவற்றினால் வடக்கு, கிழக்கு பகுதிகளில் கல்வி, பொருளாதாரம் என்பவை வீழ்ச்சி கண்டுள்ளது.
அரசாங்கத்தின் திட்டங்களை எம்மக்கள் சரியாக பயன்படுத்தினால் வடக்கும் மற்றும் கிழக்கினதும் கல்வி, பொருளாதாரம், விவசாயம் உள்ளிட்ட அனைத்தும் முன்னேற்றம் காணும் என்பதில் ஐயப்படத் தேவையில்லை.
புலம்பெயர் தமிழர்களின் பார்வையானது இலங்கைத் தமிழர்களின் கல்வி, வறுமை மற்றும் சுகாதாரம் நீக்குவதற்கு எடுக்கப்படும் கரிசனை சரியானது.
இருந்தும் இவற்றைவிட எம்மக்களுக்கு தொழில்துறை, தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுத்தால் தான் நிலையான அபிவிருத்தியை பெறமுடியும்.
நிதிகளையும், சலுகைகளையும் பொதுமக்கள் மட்டும் பெற்றால் போதாது. மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் உள்ள மக்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி என்பன உயர்த்தப்பட வேண்டும்.
பெற்றோர்கள், பொதுமக்கள் சிந்தித்துச் செயற்பட்டால் மாவட்டத்தின் பொருளாதாரம், கல்வியும் வளர்ச்சியடையும் என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் மற்றும் அரசாங்க திணைகள உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.