யாழில் சற்று முன்னர் பதற்றம்! பொலிஸார் அசமந்தம்

Report Print Murali Murali in சமூகம்

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் நகைக்கடை ஒன்றினுள் புகுந்து சற்று முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

20 பேர் கொண்ட குழுவினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தாக்குதல் மேற்கொண்டவர்கள் சம்பவ இடத்தில் இருக்கின்ற போதிலும் பொலிஸார் அவர்களை கைது செய்ய பின்னடிப்பு காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “தாக்குதல் மேற்கொண்ட தரப்பினர் அந்த நகை கடையில் நகை ஒன்றினை செய்வதற்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த நகை செய்யப்பட்ட போதிலும், அது சற்று நிறை அதிகமாக இருந்துள்ளது. இதனால் கடை உரிமையாளர் அதற்கு தகுந்தாற்போல் பணம் அறவிட்டுள்ளார்.

இதனால் இரண்டு தரப்பினர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது மோதலாக மாறியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன்.

இந்த சம்பவத்தில் நகை கடை உரிமையாளர், அவரின் மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு இரண்டு போக்குவரத்து பொலிஸார் வந்த போதிலும், தாக்குதல் மேற்கொண்டவர்கள் பொலிஸாருடனும் முரண்பட்டுள்ளனர்.

இதனால் அவர்களை பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, தாக்குதலை நடத்தியவர்கள் அங்கிருந்து சென்றுள்ளதாக அறியமுடிகின்றது.

எனினும், தாக்குதலை மேற்கொண்டாக கூறப்படும் தரப்பினர்கள் வந்ததாக சொல்லப்படும் கார் ஒன்று அந்த பகுதியில் தரித்து நிற்பதாக சொல்லப்படுகின்றது.

எவ்வாறாயினும், சம்பவம் இடம்பெற்று ஒரு மணித்தியாலம் கடந்தே அந்த இடத்திற்கு மேலதிக பொலிஸார் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலதிக செய்தி மற்றும் படங்கள் - சுதந்திரன்