தங்காலை, குடாவெல்ல மீன்பிடி துறைமுக துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைத் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் 25ஆம் திகதி அதிகாலை வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் அங்கிருந்த நால்வர் உயிரிழந்ததோடு, மேலும் 8 பேர் காயமடைந்திருந்தனர்.
இந்த சம்பவம் தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு T56 ரக துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி (Pistol) ஆகியன பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருந்தது.
இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் நேரடி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மாத்தறை, தங்காலை பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய 10 பொலிஸ் குழுக்கள் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலை குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் இன்று (19) முற்பகல் சந்தேநபரை கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.