வவுனியா நகரசபையில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பாரிய பின்னடைவு..

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா நகரசபையில் ஆட்சி அமைத்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வவுனியா நகரசபையில் தமிழர் விடுதலைக்கூட்டணி விகிதாசாரத்தின் அடிப்படையில் தெரிவான மூன்று உறுப்பினர்களைக் கொண்டு சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி, சிறிலங்கா பொதுசனபெரமுன மற்றும் ஈ.பி.டி.பியுடன் இணைந்து ஆட்சி அமைத்திருந்தது.

இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா நகரசபை அமர்வு தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது வவுனியா தர்மலிங்கம் வீதியின் முகப்பு பகுதியில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமசந்திரனுக்கு சிலை அமைப்பது தொடர்பாக வவுனியா நகரசபையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. அதற்கமைய சபையின் தவிசாளரால் உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம், எம்.ஜி.ஆர் ஒரு நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர். ஈழமக்களை எழுச்சியடைய செய்ததில் அவரது பங்கும் அளப்பரியது.

இலங்கையில் இருந்து சென்ற தமிழ் அகதிகளிற்கு உரிய வசதிகளை செய்து கொடுத்தவர். அதனை விட அவர் இலங்கையில் பிறந்து இந்தியாவில் புகழ் பெற்றவர்.

எனவே அந்த பெரிய மனிதரை கௌரவிக்கும் விதமாக அவரது சிலையை அமைப்பதற்கு நகரசபை அனுமதி வழங்கவேண்டும் என்று தெரிவித்தார்.

இதன்போது உறுப்பினர்கள் பலரும் தமது கருத்துக்களை முன்வைத்திருந்த நிலையில் பலரும் சிலை வைப்பதற்கு ஆதரவாக கருத்துக்களை முன்வைத்திருந்தனர். இதன்போது பேசிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் போட்டியிடுட்டு உறுப்பினராகியிருந்த் சமந்தா செபநேசராணி வவுனியாவில் ஏற்கனவே இருக்கும் சிலைகளே சரியான முறையில் பராமரிக்கபடுவதில்லை.

எம்.ஜி ஆரைவிட தமிழர்களிற்காக போராடிய பல தலைவர்கள் இருக்கின்றனர். எனவே சிலை அமைக்கும் விடயத்தில் எனக்கு உடன்பாடில்லை என்று தெரிவித்தார். மற்றொரு தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினரான பா.ஜெயவதனியும் சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

அதேபோல் தமிழர் விடுதலைக் கூட்டனியைச் சேர்ந்த தவிசாளருக்கும் குறித்த விடயத்தில் உடன்பாடு இருக்கவில்லை.

எனினும் அநேகமான உறுப்பினர்கள் சிலை அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்தமையால் அனுமதி வழங்குவதாக தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. சிலை அமைப்பதற்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த போது தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் ரி. கே. ராஜலிங்கம் மேசையில் தட்டி ஆரவாரம் செய்திருந்தார்.

இந் நிலையில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் உறுப்பினர்களை தவிர தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களான 8 பேருடன், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள், ஈ.பி.டி.பி உறுப்பினர், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரும் சிலையை நிறுவுவதற்கு தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.

இதன் காரணமாக தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு வவுனியா நகரசபையில் ஆட்சி அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய கட்சிகள் தற்போது அக்கட்சியின் முடிவை எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

இந் நிலைப்பாடானது நகரசபையின் செயற்பாட்டில் தொடர்ச்சியாக இருந்து வரும் திருப்தியற்ற நிலையின் வெளிப்பாடு என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இரண்டு வருடங்களின் நிறைவில் ஆட்சியை கவிழ்ப்பதற்கு ஓர் சமிக்ஞையாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.