பொலன்னறுவை - கதுறுவெல நகரில் மட்டக்களப்பு – கொழும்பு வீதியை அண்டி அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி மற்றும் மின் உபகரண விற்பனை நிலையமொன்றில் நேற்று ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் இரண்டு மாடி கட்டிடமொன்று முற்றாக சேதமடைந்துள்ளதோடு அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களும் தீயினால் எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ, அருகிலிருந்த கட்டிடங்களுக்கும் பரவியதில் ஆறு கடைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தீ விபத்தைத் தொடர்ந்து நகர மக்களும் கடை உரிமையாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினருமாக இணைந்து சுமார் மூன்று மணிநேர போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
மின்னொழுக்கின் காரணமாகவே இந்த தீ விபத்து நேர்ந்திருக்கலாம் என பரவலாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கதுறுவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.