கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்தின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு!

Report Print Nesan Nesan in சமூகம்

கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலய பௌதீக வளங்கள் பற்றாக்குறை, ஆசிரியர் பிரச்சினை என்பன விரைவாக தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று மாலை இப்பாடசாலைக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன், ஆசிரியர்கள், பெற்றோர் சங்கத்தினரை சந்தித்து இது குறித்து உறுதி மொழி வழங்கியுள்ளார்.

கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையினால் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயம் முற்றாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தது.

குறித்த வெள்ள நிலைமை ஏற்பட்ட பகுதியையும் பார்வையிட்டு பாடசாலையின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கையை எழுத்து மூலமாக தெரியப்படுத்துமாறு அப்பாடசாலை அதிபரிடம் கேட்டுக்கொண்டார்.

ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக பெற்றோர்கள் தெரிவித்ததை அடுத்து இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் இனிமேல் சிரமங்களை எதிர்கொள்ளாத வகையில், இப்பிரச்சினைக்கு நிரந்திர தீர்வை பெற்று தருவதாக அவ்விடத்தில் வாக்குறுதி வழங்கினார்.

கடந்த கால சுனாமி அனர்த்தத்தின் போது முற்றாக அழிந்த இப்பாடசாலை புதிய கட்டிடங்களுடன் தற்போது இயங்குகின்றது.

மழை ஓய்ந்திருந்த போதிலும் வெள்ளநீர் வடிந்தோட வடிகால் வசதி இல்லாமையினால் பாடசாலை வளாகம் முழுவதும் நீர் தேங்கி காணப்படுகின்றது.

இதன் காரணமாக பாடசாலைக்கு மாணவர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. தொடர்ந்து நீர் தேங்கிக் காணப்படுவதால் பாடசாலை சூழலில் டெங்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன் நோய் பரவும் சந்தர்ப்பமும் அதிகம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.