இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளருக்கு இத்தனை மில்லியன் கொடுப்பனவா?

Report Print Kamel Kamel in சமூகம்

இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வரும் சந்திக்க ஹதுருசிங்கவிற்க மாதாந்த கொடுப்பனவாக 7.5 மில்லியன் ரூபா வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஹதுருசிங்கவிற்கு பெரும் தொகை கொடுப்பனவு வழங்கப்பட்ட போதிலும், இலங்கை அணி அண்மைக் காலமாக போட்டிகளில் பிரகாசிக்கத் தவறியுள்ளமை கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

ஹதுருசிங்கவை இலங்கை கிரிக்கட் நிர்வாகம் மூன்றாண்டு காலத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அதில் 12 மாதங்கள் பூர்த்தியாகின்றது.

பல்வேறு காரணிகளினால் இலங்கை கிரிக்கட் அணி கடந்த காலத்தினைப் போன்று போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்த தவறியுள்ளது என்ற போதிலும் பிரதானமாக அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் தனது கடமைகளை உரிய முறையில் செய்யத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக பங்களாதேஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வந்த ஹதுருசிங்க, பெருந்தொகை கொடுப்பனவிற்கு இலங்கை கிரிக்கட்டினால் அழைத்து வரப்பட்டிருந்தார்..

அடிப்படைச் சம்பளமாக மாதமொன்றுக்கு 20000 அமெரிக்க டொலர்களும், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக மாதம் ஒன்றுக்கு 10000 அமெரிக்க டொலர்களும், தந்திரோபாயங்களை வகுத்தல் மற்றும் திட்டமிடல்களுக்காக வருடமொன்றுக்கு 60000 டொலர்களையும், போக்குவரத்தச் செலவுகளுக்காக வருடமொன்றுக்கு 20000 அமெரிக்க டொலர்களும் ஹதுருசிசங்கவிற்கு கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது.

இதன்படி மாதமொன்றுக்க சுமார் 41666 அமெரக்க டொலர் அதாவது இலங்கை ரூபாவில் சுமார் எழுபத்து ஐந்து லட்சம் வழங்கப்படுகின்றது.

எனினும், ஹதுருசிங்க அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் அணியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்லவில்லை என பொதுவாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்படத்தக்கது.

பெரும்பாலும் ஹதுருசிங்க ஒப்பந்த காலம் வரையில் நீடிப்பாரா என்பது குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன், அவ்வாறு ஒப்பந்த காலம் வரையில் பணியாற்றினாலும் அதன் பின்னர் ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது என ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.