பாதிப்பில்லா வகையில் விலங்கறுமனையை பராமரிக்க இணக்கம்

Report Print Rusath in சமூகம்
58Shares

சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் ஏறாவூர்பற்றில் அமைந்துள்ள விலங்கறுமனையை பராமரிக்க ஏறாவூர் நகரசபையும் ஏறாவூர்பற்று பிரதேசசபையும் இணக்கம் தெரிவித்துள்ளது.

சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் ஏறாவூர்பற்று ஐயன்கேணி பகுதியில் அமைந்துள்ள விலங்கறுமனையை பராமரிக்க ஏறாவூர் நகரசபையும் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையும் இணக்கம் கண்டிருப்பதாக அதன் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் ஐயன்கேணிப் பகுதியில் தற்போதைய விலங்கறுமனை அமைந்துள்ள சூழலையும் அங்கு சமீபத்திய அடை மழை வெள்ளத்தினால் குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களையும் கண்டறியும் விஜயமொன்றை ஏறாவூர் நகர மேயர் மற்றும் எறாவூர்பற்று பிரதேசசபையின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் இன்று மேற்கொண்டிருந்தனர்.

இது குறித்து நிலைமையை பார்வையிட்ட பின் மேற்படி விலங்கறுமனையை பராமரிக்க ஏறாவூர் நகரசபையும் ஏறாவூர்பற்றுப் பிரதேசசபையும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை முன்னெடுக்க இருப்பதாக ஏறாவூர் நகர மேயர் இறம்ழான் அப்துல் வாஸித், ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை தவிசாளர் நாகமணி கதிரவேல் ஆகியோர் தெரிவித்தனர்.

மாட்டிறைச்சி கடைகளும் ஒரு சில இறைச்சி வியாபாரிகளும் ஏறாவூர் நகரசபை பிரிவிலும் விலங்கறுமனை ஏறாவூர்பற்று பிரதேசசபை எல்லைக்குள்ளும் இருக்கும் சூழ்நிலையில் விலங்கறுமனையை பயன்படுத்துவதால் ஏறாவூர் நகரசபையும், ஏறாவூர்பற்று பிரதேசபையும் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தின் பராமரிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.

இந்த உடன்பாட்டின்படி விலங்கறுமனையின் கண்காணிப்பு, பாதுகாப்பு, ஊழியர் பகிர்ந்தளிப்பு, வரி அறவீடு உள்ளிட்ட விடயங்கள் இணைந்த வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கள விஜயத்தின்போது கூடவே, ஏறாவூர் நகரசபையின் செயலாளர் எம்.ஆர்.சியாஹுல் ஹக், தொழிநுட்ப உத்தியோகத்தர் எஸ்.சுதாகரன், ஏறாவூர்பற்று பிரதேசசபையின் பிரதி தவிசாளர் காளையப்பன் ராமச்சந்திரன், செயலாளர் எஸ்.கிருஸ்ணப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.