கச்சதீவு பெருவிழா தொடர்பில் விசேட கூட்டம்

Report Print Sumi in சமூகம்
104Shares

யாழ்ப்பாணம் - கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவில் இம்முறை 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றதாக யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவிற்கான ஏற்பாட்டுக் கலந்துரையாடல் நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து கலந்துகொள்ளவுள்ள பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் தங்குமிட வசதிகள், போக்குவரத்து உணவு உள்ளிட்ட பல தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு, பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கான முன் ஆயத்த கலந்துரையாடலில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த பெருநாள் திருப்பலியில் யாழ்.மறைமாவட்ட ஆண்டகை பேர்னாட் யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

பெருவிழாவிற்கு செல்லவுள்ள பக்தர்களின் போக்குவரத்து ஏற்பாடுகள் மார்ச் மாதம் 15ஆம் திகதி அதிகாலை 3.00 முதல் பேருந்துச் சேவைகள் இடம்பெறும், அத்துடன், காலை 5 மணிமுதல் படகுச் சேவைகள் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கச்சதீவு ஆலயத்தில் இரண்டு நாட்களுக்கும் பக்தர்கள் தங்குவதற்கான மேலதிக ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென பக்தர்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டமை தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளனவா என ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கப் பதிலளிக்கையில், அந்தோனியார் ஆலய பெருவிழா நாட்களில் குறிக்கப்படும் இரண்டு நாட்கள் மாத்திரமே பக்தர்கள் ஆலய வளாகத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகள் சாத்தியமானது.

பக்தர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு, பெருவிழாவாக நிர்ணயிக்கப்பட்ட இரண்டு நாட்கள் மாத்திரமே பக்தர்கள் ஆலயத்தில் தங்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

எனவே, அனைவரும் பெருவிழாவில் கலந்துகொண்டு அந்தோனியாரின் அருளைப் பெற வேண்டுமென்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில், நெடுந்தீவு பங்குத் தந்தை உட்பட மேலதிக அரசாங்க அதிபர், முப்படையினர், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், போக்கவரத்துச் சபையினர், படகுச் சேவையாளர்கள், உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.