திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் இன்று மாலை தப்பியோடியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த கைதி திருகோணமலை பொது வைத்தியசாலையில் 17ம் வாட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நோயாளர்களை பார்வையிட பொதுமக்கள் வந்தபோது, தான் மலம் கழிப்பதற்காக செல்ல வேண்டுமென சிறைச்சாலை உத்தியோகத்தரிடம் தெரியப்படுத்தியதை அடுத்து அவர் மலசல கூடத்திற்கு செல்வதற்கு அனுமதி அளித்துள்ளார்.
பின்னர் வெகு நேரமாகியும் வராமையினால் மலசல கூடத்தின் கதவைத் திறந்து பார்த்த போது குறித்த கைதி அங்கு இல்லையென தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வைத்தியசாலை வளாகத்தை சுற்றி வைத்தியசாலை காவலாளிகளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு காணாமல் போன கைதி 32 வயதுடைய ஹெரோயின் போதைப் பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மாத்தளை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.