தாமரைக் கோபுரத்தின் வணிகச் செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகும் என தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தெற்காசியாவின் இரண்டாவது மிக உயர்ந்த கோபுரமான இந்த தாமரைக் கோபுரம், 350 மீற்றர் உயரத்தைக் கொண்டுள்ளதுடன், 30 ஆயிரத்து 600 சதுர மீற்றர் பரப்பளவையும் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
எனினும், இது இலங்கையிலுள்ள மிக உயரமான கோபுரமாகும்.
இந்த கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதுடன், இதில் 80 வீதமான தொகையை சீன எக்சிம் வங்கி வழங்கியுள்ளது.
தொலைத் தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் இந்த கோபுரத்தின் நிர்மாணம் முன்னெடுக்கப்படுவதுடன், தாமரைக் கோபுரத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்த திட்டத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
உணவகம், தொலைத்தொடர்பாடல் காட்சியகம், சிற்றுண்டிச் சாலை, பல்பொருள் வர்த்தக தொகுதி, கருத்தரங்கு மண்டபம், கேட்போர் கூடம், அதிசொகுசு ஹோட்டல் அறைகள், விழா மண்டபம் மற்றும் கண்காணிப்பு கூடங்கள் என்பனவும் இந்த தாமரைக் கோபுரத்தில் அமையப் பெற்றுள்ளன.
தாமரைக் கோபுரத்திற்குள் பிரவேசிப்பதற்கான நான்கு நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுள் முக்கிய பிரமுகர்கள் பிரவேசிப்பதற்காக இரண்டு நுரைவாயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.