யாழில் தற்போதும் 16க்கும் மேற்பட்ட அகதி முகாம்கள்

Report Print Steephen Steephen in சமூகம்

போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் யாழ்ப்பாணத்தில் 16க்கும் மேற்பட்ட அகதி முகாம்கள் இன்னும் இருப்பதாக வடக்கு, கிழக்கு மீனவ ஒத்துழைப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்டன் ஜேசுதாசன் தெரிவித்துள்ளார்.

சில அகதி முகாம்களில் 200 குடும்பங்கள் இருப்பதாகவும் அவர்கள் பயன்படுத்த இரண்டு கழிவறைகள் மட்டுமே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் அகதி முகாம்கள் இருப்பது தென் பகுதியில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, யாழ். பல்கலைக்கழகத்தின் பேராசியர்களுக்கும் தெரியாது எனவும் அன்டன் ஜேசுதாசன் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். காணி உரிமைகள் சம்பந்தமான மக்கள் அமைப்பு இந்த செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.

வடக்கு, கிழக்கில் இராணுவம் கைப்பற்றியிருந்த காணிகளில் 90 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வெளியிட்ட தகவலை, இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு சமூக செயற்பாட்டாளர்கள் சவாலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

மக்களுக்கு சொந்தமான காணிகளை மட்டுமல்லாது பொது இடங்களையும் பாதுகாப்பு தரப்பினரும், பல அரச நிறுவனங்களும் பலவந்தமாக பிடித்து வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில் எந்த உண்மையும் இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

“ஜனாதிபதி கடந்த காலங்களில் நடித்த நடிப்பை பார்க்கும் போது அவரை நம்ப முடியுமா என்ற பிரச்சினை எமக்கு ஏற்பட்டுள்ளது” என அன்டன் ஜேசுதாசன் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு தரப்பினர் வடக்கு, கிழக்கில் கைப்பற்றியுள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களை கைவிட, இராணுவம் அரசாங்கத்திடம் பணத்தை கேட்பது கேலிக்குரிய நிலைமை.

மூன்று தசாப்தங்களாக காணிகளை விட்டு விரட்டப்பட்டிருந்த மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

வருட இறுதிக்குள் அனைத்து காணிகளும் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருடம் கூறிய போதிலும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனவும் அன்டன் ஜேசுதாசன் மேலும் தெரிவித்துள்ளார்.