மடு பிரதேச செயலகத்தின் நுழைவாயிலை மூடி ஆர்ப்பாட்டம்

Report Print Ashik in சமூகம்

மன்னார் - மடு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கோரி ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தை மடு பிரதேச கிராமிய அமைப்புக்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து இன்று காலை மடு பிரதேச செயலக நுழைவாயிலை மூடி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 76 கிராமங்களை கொண்ட 25 கிராம மட்ட அமைப்புக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று காலை 8 மணியளவில் மடுபிரதேச செயலகத்திற்கு முன் ஒன்று கூடியதோடு, மடு பிரதேச செயலகத்தினுள் எவரையும் செல்ல விடாது கதவை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வீதிகள், உள்ளக வீதிகள் செப்பனிடப்படாமை, வீதி மின் விளக்குகள் பொருத்தாமை, குடிநீர் வசதிகள் இன்மை, உரிய போக்குவரத்து சேவைகள் இல்லாமை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கும் வகையில் மடு பிரதேசச் செயலாளர் ஜெயகரனிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் சார்வமத தலைவர்கள், மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் மடு பிரதேசச் செயலகத்தில் இடம்பெற இருந்த வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்விற்கு அமைச்சர் மனோ கணேசன் மற்றும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் வருகை தந்த போது நுழைவு வாயிலில் மறித்து தமது பிரச்சினைகள் தொடர்பில் தெரிவித்ததோடு, கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.

மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டு அறிந்து கொண்ட அமைச்சர் மனேகணேசன் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தான் உடனடியாக கவனம் செலுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக உறுதியளித்துள்ளார்.

Latest Offers