யுத்தத்தில் அகதிகளாக இடம்பெயர்ந்த தமிழர்கள் பலர் தாயகம் திரும்புகின்றனர்!

Report Print Murali Murali in சமூகம்

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிக அலுவலக வசதிப்படுத்தலுடன் யுத்தகாலத்தில் தமிழ் நாட்டுக்கு அகதிகளாக சென்றவர்களில் 39 குடும்பங்கள் தாயகம் திரும்பவுள்ளனர்.

இவர்களை அனைவரும் எதிர்வரும் 31ம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

சுயவிருப்பின் பேரில் 39 குடும்பங்களைகொண்ட 83 இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இதில் 34 ஆண்களும் 49 பெண்களும் உள்ளடங்குவர்.

இவர்கள் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை மாவட்டங்களுக்கு செல்லவுள்ளனர்.

இவர்களுக்கு இலவச பயணச்சீட்டு, ஒன்றிணைத்தல் மானிய கொடுப்பனவாக வயது வந்தவர்களுக்கு 10,000 ரூபாவும், வயது குறைந்தவர்களுக்கு 5,000 ரூபாவும், போக்குவரத்து கொடுப்பனவாக 2,500 ரூபாவும், உணவு அல்லாத மானிய கொடுப்பனவாக தனிநபருக்கு 5,000 ரூபாவும், குடும்பத்திற்கு 10,000 ரூபாவும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிக அலுவலகத்தினால் வழங்கப்படுகின்றது.

மேலும் மீள்குடியேற்ற அமைச்சினால் விமான நிலையத்தில் 5,000 ரூபாவும் தற்காலிக கொட்டகைகளுக்காக 25,000 ரூபாவும், உபகரணங்களுக்கு 3,000 ரூபாவும் காணிதுப்பரவு செய்வதற்கு 5,000 ரூபாவும்கொடுப்பனவு செய்யப்படுவதுடன் வாழ்வாதாரத் திட்டங்களிலும் வீட்டுத்திட்டங்களிலும் தெரிவின் போதுசிறப்புபுள்ளிகள் வழங்கப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 100,000 அகதிகள் இந்தியாவில் உள்ளதாகவும் அதில் 65,000 பேர் அகதி முகாம்களிலும் 35,000 பேர் வெளியிலும் உள்ளார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.