முற்றாக முடங்கியது மட்டக்களப்பு: பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

Report Print Nesan Nesan in சமூகம்

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பாக கடந்த நாட்களில் மாகாணத்திற்குட்பட்ட மாவட்டங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் கடையடைப்புக்களும், கையெழுத்து வேட்டைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள சகல பிரதேசங்களிலும் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இனவாதம் பேசுகின்ற ஆளுநர் உடனடியாக பதவியிலிருந்து மாற்றப்பட வேண்டும், இது முஸ்லிம் இனத்திற்கான எதிர்ப்பு அல்ல, இனவாதம் பேசும் தனி நபருக்கான எதிர்ப்பு நடவடிக்கை என குறிப்பிட்டு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு மற்றும் சமூக வலைதள ஆர்வலர்கள் ஹர்த்தாலுக்கான அழைப்பினை விடுத்துள்ளனர்.

அதன் பிரகாரம் வர்த்தக சங்கம், தனியார் போக்குவரத்து சங்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள், அரச திணைக்களங்கள் என்பனவற்றின் ஆதரவுடன் மிகவும் சுமூகமான நிலையில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் ஒரு சில பகுதிகளின் வீதியில் டயர்கள் எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், அரச போக்குவரத்து சேவைகளில், தூர பிரதேச சேவைகள் மட்டும் நடைபெறுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் வீதியில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers