திருகோணமலை - மூதூர் பிரதேசத்தில் விபத்தொன்றினை ஏற்படுத்தி விட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஒருவரை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த நபரை இம்மாதம் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் பாட்டளிபுரம், தோப்பூர் பகுதியை சேர்ந்த 22 வயதுடையவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
குறித்தநபர் கடந்த 17ஆம் திகதி தோப்பூர் பகுதியில் முச்சக்கரவண்டியில் சென்று ஒருவரை மோதி விபத்தினை ஏற்படுத்தி விட்டு, மோதுண்ட நபர் விழுந்து உயிருக்கு போராடிய வேளையில், காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக சந்தேகநபருக்கெதிராக மக்கள் செய்த முறைப்பாட்டையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.