பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 700 ரூபாவாக நிர்ணயிக்க இணக்கம்

Report Print Ajith Ajith in சமூகம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமாக 700 ரூபாவை பெற்றுக்கொடுக்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொழில் திணைக்களத்தில் இன்று அமைச்சர் நவீன் திஸாநாயக்க, பிரதியமைச்சர் ரவீந்திர சமரவீர தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இதன்போதே இதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி அடிப்படை சம்பளமாக 700 ரூபாவும், விலைக்கொடுப்பனவாக 50 ரூபாவும், ஊழியர் நம்பிக்கை நிதி கொடுப்பனவாக 105 ரூபாவையும் வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளன.

இந்நிலையில் மேலதிக கிலோ தேயிலைக் கொழுந்துக்காக 45 ரூபாய் வழங்கப்படவுள்ளது.

அதேநேரம் கூட்டு உடன்படிக்கை இரத்தான திகதியில் இருந்து கொடுக்கப்படவேண்டிய நிலுவைகளும் வழங்கப்பட இணங்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்களின் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஸ் உட்பட்டவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் சார்பில் 22 பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இந்தநிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் கூட்டு உடன்படிக்கை அடுத்த வாரத்தில் செய்துக்கொள்ளப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.